Saturday, November 11, 2006

சுதேசி அறிவியல் அமைப்புக்கு ஜவஹர்லால் நேரு பரிசு

சுதேசி அறிவியல் இயக்கம்





சுதேசி அறிவியல் இயக்கம்: விஞ்ஞான பாரதி அமைப்பின் கேரள பிரிவாகும். 2005-2006 ஆம் ஆண்டுக்கான அறிவியலை மக்களிடையே பிரபலப்படுத்தியமைக்கான பரிசான 'ஜவகர்லால் நேரு பரிசு' இந்த அமைப்புக்கு கிடைத்துள்ளது. இந்திய அறிவியல் காங்கிரசின் தேசிய விருது கேரளாவைச் சார்ந்த ஒரு அரசு சாரா அமைப்புக்கு கிடைப்பது இதுவே முதல் தடவையாகும். ஹைதராபாத்தில் விவசாய பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பரிசளிப்பு விழாவில் சுதேசி அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவரான திரு.பி.என்.சுப்பிரமணியம் இந்த விருதினை பிரதம மந்திரி மன்மோகன்சிங்கிடமிருந்து பெற்றுக்கொண்டார்.


சுதேசி அறிவியல் இயக்கம் தன்னார்வ அமைப்பாகும். இது 1991 இல் நவம்பர் 7 (சிவி ராமனின் பிறந்த தினம் அன்று) தொடங்கப்பட்டது. இது பல அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. ஆயுர்வேதம், யோகம், கணிதம், சூழலியல் அறிவியல் நிகழ்ச்சிகள் ஆகியவை இவற்றுள் அடங்கும். உலக அளவில் சூழலியல் மற்றும் ஆயுர்வேதம் தொடர்பாக உலக அளவிலான இரு மாநாடுகளை இந்த அமைப்பு நடத்தியுள்ளது. இதில் 40 நாடுகளைச் சார்ந்த அறிவியல் அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.



டாக்டர் அப்துல்கலாம், அவர்களின் பிறந்ததினமான அக்டோபர் 15 இந்த அமைப்பால் தேசிய சுய சார்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் பெண்கள் பிரிவான 'சக்தி' அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமாக கிராமப்புற பெண்களுக்கும் மற்றும் நலிந்த பிரிவினைச் சார்ந்த பெண்களுக்கும் சுயசார்பும் வலிமையும் உருவாக்குவது தொடர்பாக உழைத்து வருகிறது.


இந்த அமைப்பினால் வெளியிடப்படும் மாத இதழ் 'Science India' இது கேரளா முழுவதும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் சேவை அமைப்புகளுக்கு மத்திய அரசு அறிக்கை பாராட்டு

'தன்னலமற்ற முறையில் திறமையாக வனவாசி மக்கள் மேம்பாட்டிற்கு பாடுபடுகின்றன'



வனவாசிகளுக்கு சிறந்த பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை மத்திய அரசின் வனவாசி மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கை பாராட்டியுள்ளது.




  • அகிலபாரத வனவாசி கல்யாண் ஆசிரமும் அது சார்ந்த அமைப்புகளும்
  • சேவா பாரதி
  • வித்யா பாரதி மற்றும்
  • தீனதயாள் ஆராய்ச்சி மையம் ஆகியவை இந்த அமைப்புகள் ஆகும்.




இவை மிகச்சிறந்த முறையிலும் தன்னலமற்ற முறையிலும் வனவாசிகளின் மேம்பாட்டிற்காக உழைத்துள்ளன என்பதனை மத்திய அரசின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.



சேவாபாரதி




சேவாபாரதி பாரதம் முழுவதும் 35000க்கும் அதிகமான சேவை பணிகளை செய்துவரும் இயக்கமாகும். இதன் செயல்பாடுகள் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது. நலிவடைந்த பிரிவினரின் சிறுவர் சிறுமியருக்கு கல்வி அளித்தல், அன்பு இல்லங்களை நடத்துதல், பெண்களுக்கு சுயசார்பு அளிக்கும் தொழில்கல்வி அளித்தல் மற்றும் சுயநிதி குழுக்கள் மூலம் அவர்கள் செயல்பட உதவுதல். மருத்துவ சேவைகள்,பேரிடர் துயர் களைதல் ஆகிய அரும் பணிகளை ஆர்ப்பாட்டமின்றி நிகழ்த்தி வரும் அமைப்பு சேவா பாரதி ஆகும்.



வனவாசி கல்யாண் கேந்திரா


வனவாசி கல்யாண் கேந்திரா 1969 இல் உருவாக்கப்பட்டு மிகச்சிறந்த முறையில் முழுமையான வனவாசி முன்னேற்றத்திற்காக உழைக்கிறது. இந்த அமைப்பின் பல சமூக சேவகர்கள் பிரிவினைவாத பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். என்ற போதிலும் தளராது நலிவுற்ற மக்கள் சேவையில் முத்திரை பதித்து வருகிறது வனவாசி கல்யாண் கேந்திரா. தலித் பழங்குடி மக்களான ரியாங்குகளுக்காக நீதிமன்ற குரலை எழுப்புவதில் வெற்றி கண்டுள்ளது வனவாசி கல்யாண் அமைப்பின் வெற்றி மைல்கல்களில் ஒன்றாகும். ஒராசிரியர் பள்ளி மூலம் கல்வித்துறையில் இந்த அமைப்பு பெற்றுள்ள வெற்றி பல வளரும் நாடுகளுக்கு சிறந்த மாதிரியாக அமைந்துள்ளது.



தீன் தயாள் ஆராய்ச்சி மையம்

தீன் தயாள் ஆராய்ச்சி மையம் குறித்து மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறியுள்ளதாவது:

"தீனதயாள் ஆராய்ச்சி மையம் ஒரு தனித்தன்மை வாய்ந்த அமைப்பாகும். ஏனென்றால் அந்த அமைப்பு பாரதத்திற்கு மிகவும் ஏற்புடையதான கிராம முன்னேற்ற மாதிரியை வளர்த்தெடுத்து அதனை நிறைவேற்றி வருகிறது. தீன்தயாள் ஆராய்ச்சி மையம் மக்கள் சக்தியே அரசியல் அதிகாரத்தை விட மிகவும் உள்வலிமையும் ஸ்திரத்தன்மையும் சாசுவதத்தன்மையும் கொண்டது என அறிந்துள்ளது. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட நலிவடைந்த மக்களுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் ஒருவர் அரசு நிர்வாகத்தின் இயக்க முறையை சரியாக அறிந்து கொள்ளலாம். சமுதாய முன்னேற்றமும் வளமும் ஏற்பட வேண்டுமானால் இளைய தலைமுறைக்கு செயல்திறமும் தற்சார்பும் கொண்ட உத்வேகம் அளிக்கப்பட வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் தீன்தயாள் ஆராய்ச்சி மையம் 100 கிராமத் தொகுப்புகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் 5 கிராமங்கள் உள்ளன. ஏற்கனவே 16 தொகுப்புகளில் 50000 மக்கள் வாழும் 80 கிராமங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன."
(நன்றி : குடியரசு தலைவரின் இணையதளம்: 52 ஆவது தேசிய திரைப்பட விழா பரிசளிப்பின் போது டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பேசியதிலிருந்து: 21-10-2005, புது டெல்லி)

Wednesday, November 08, 2006

மாதவம் செய்த எம் மாதவன் தாளில் அர்ப்பணம் இந்த வலைப்பூ


எத்தனையோ சேவைகளை அன்னை பூமிக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆற்றி வருகின்றனர். பற்பல துறைகளில் அவர்கள் இப்பணிகளை செய்துவருகின்றனர். குறிப்பாக நமது சமுதாயக் குடும்பத்தின் நலிவடைந்த சகோதர சகோதரிகளுக்கு ஆற்றிவருகின்றனர். இச்சேவைகள் அமைதியாக நடைபெறுகின்றன. தம்மை முழுமையாக தாயின் தாளில் அர்ப்பணித்த பாரத அன்னையின் புதல்வர்களின் புதல்விகளின் சேவை மலர்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியோம் பராபரமே!
அன்பர் பணி செய்ய எம்மை ஆளாக்கிவிட்டுவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் பராபரமே!